எதிரி நாடுகளில் ரேடார் சிஸ்டத்தை கண்டுபிடித்து அழிக்கும் ருத்ரம்- 1 ரக ஏவுகணையை இந்தியா வெற்றிக்கரமாக சோதித்து பார்த்துள்ளது
ஹைதரபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் தயாரித்துள்ள இந்த ஏவுகணை ஒடிசாவில் பாலசோரில் இன்று காலை 10.30 மணிளவில் சுகோய்- 30 ரக போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டது. ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் சென்று வங்கக்கடலில் உள்ள இலக்கை ருத்ரம் ஏவுகணை துல்லியமாக தாக்கியது இந்த ஏவுகணை ஏவப்பட்டால், எதிரி நாடுகளின் ரேடார்களை தாக்கி அழித்துவிடும். இந்த சமயத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் தங்கள் பணியை எதிரி நாட்டுக்குள் செவ்வனே செய்ய முடியும். என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ருத்ரம் ஏவுகணையை 500 மீட்டர் உயரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் உயரம் வரை எடுத்து சென்று வீசமுடியும் . சுமார், 250 கிலோ மீட்டர் சற்றளவுக்குள் உள்ள கதிர் வீச்சை வெளிப்படுத்தும் பொருள்களை தாக்கி அழித்து விடும் தன்மை உடையது. ஏவுவதற்கு முன்பும் அதன் பின்பும் கூட இலக்கை மாற்றிக் கொள்ள முடியும்.
அமெரிக்க கடற்படையால் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரித்த ஏஜிஎம் -88 ரக மேம்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையுடன் இந்த ஏவுகணையை ஒப்பிடலாம். ஏஜிஎம் -88 ரக ஏவுகணை ரேடார்கள் அணைக்கப்பட்டாலும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ருத்ரம் ஏவுகணையும் எதிரியின் ரேடார் அணைக்கப்பட்டு விட்டாலும் அதை சென்று துல்லியமாக தாக்கி அழித்து விடும்.
ருத்ரம் ஏவுகணைதான் இந்தியாவின் முதல் ரேடார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அழிக்கும் முதல் சூப்பர்சோனிக் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ருத்ரம் ஏவுகணையை வெற்றிக்கரமாக பரிசோதித்த தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சிக்கழகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.