கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வு பரப்புரையை, பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டதிற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பண்டிகைக்காலம், குளிர்காலம் போன்ற காலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ஜன ஆன்டோலன் என்ற பரப்புரை இயக்கத்தை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். அதில், தடுப்பூசி கிடைக்கும் வரை மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கிருமிநாசினியால் கழுவுவது போன்றவை அவசியம் என்பதோடு, கொரோனாவுக்கு எதிரான பெரிய தற்காப்பு நடவடிக்கைகள் எனவும் வலியுறுத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
பொது இடங்கள், மெட்ரோ ரெயில்கள், ஆட்டோ மற்றும் இதர பொது போக்குவரத்துகளிலும் சுவரொட்டிகள், பேனர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மூலம் கொரோனா கால வழிமுறைகளை குறித்து பரப்புரை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 67 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.