அடல் சுரங்கப்பாதையில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதால் மூன்று விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டிலேயே மிக வேகமாக செல்லும் ரயில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ். மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் டெல்லி - வாரணாசி இடையே பரிசோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்ட போது, ரயிலின் மீது கல் எறிந்து சேதப்படுத்திய சம்பவம் இரண்டு முறை நிகழ்ந்தது. புத்தம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தேபாரத் ரயிலின் கண்ணாடிகள் உடைந்து போயின. ரயில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் போலவே, தற்போது புதியதாக திறக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதைக்குள் சுற்றுலாப்பயணிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் மலையை குடைந்து அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கால நிலையிலும் வாகனங்களை இயக்கும் வகையில் பொறியியலின் உச்சத்தை தொடும் வகையில் 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்த இருவழி சுரங்கப்பாதையில், வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுரங்கத்துக்குள்ளே சென்றதும வாகன ஓட்டிகள் தங்களை மறந்து உற்சாகமடைந்து கடும் வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். சுரங்கத்துக்குள் பிற வாகனங்களை ஓவர்டேக் செய்ய அனுமதியில்லை. ஆனாலும், வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளனர். இதனால், அடப் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட 3 நாள்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து சுரங்கப்பாதையின் தலைமை பொறியாளர் புருஷேத்தம் கூறுகையில், ''சுரங்கத்துக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ஃபி எடுப்பது, அதி வேகமாக வாகனங்களை இயக்குவது தெரிய வந்துள்ளது. சுரங்கத்துக்குள் வாகன ஓட்டும் முறை குறித்து நெறிமுறைகளை மாநில அரசு வகுக்க வேண்டும் ''என்று கேட்டுக் கொண்டுள்ளார்.