மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து முடிவு செய்வதற்காக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.
ஜி.எஸ்.டி. வரி முறையை ஏற்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வரி வசூலில், மாநிலங்களுக்கான தொகையை மத்திய அரசு முழுமையாக செலுத்தாமல், நிலுவை வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், இரண்டு லட்சத்து முப்பந்தையாயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கோரிய போது, 97 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கிகளிடமிருந்து மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற யோசனையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட 21 மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலின் 42வது கூட்டத்தில் இழப்பீடு தொகை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 250 கோடியே 50 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே இன்றைய கூட்டத்தில் நிலுவைத் தொகையை அளிக்க தமிழகம் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.