உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பலியான இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அவர்கள் ஹத்ராஸ் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மனீஷா வால்மீகி என்கிற இளம்பெண்ணை 4 பேர் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கடுமையாகத் தாக்கினர். இதில் நினைவிழந்த அந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். பெண்ணின் உடலைக் காவல்துறையினரே தகனம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க வியாழனன்று ராகுல்காந்தியும் பிரியங்காவும் சென்றபோது நொய்டாவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் இருந்து ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் ஒரு காரில் பயணம் மேற்கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். உத்தரப்பிரதேச எல்லையில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல், பிரியங்கா ஆகியோருடன் 5 பேர் மட்டுமே ஹத்ராசுக்குச் செல்ல அனுமதி அளித்ததுடன் மற்ற அனைவரையும் திரும்பிச் செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தொண்டர்களை அமைதிப்படுத்திய பின் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட குழுவினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஹத்ராஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.