ஐஎஸ்-ன் கிளை அமைப்பான அல்-ஹிந்த் (Al-Hind) தென்னிந்திய வனபகுதிகளில் தங்களுக்கென தனி மாகாணத்தை உருவாக்க சதித்திட்டம் தீட்டியிருந்ததை என்ஐஏ கண்டறிந்துள்ளது. மேலும் நாட்டிற்குள் சதித்திட்டத்தை அரகேற்றிவிட்டு காட்டுக்குள் பதுங்கி வாழ்வது எப்படி என தெரிந்து கொள்ள வீரப்பன் வாழ்க்கை தொடர்புடைய புத்தகங்களை அவர்கள் படித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ரகசியத் தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ இந்த ஆண்டு தொடக்கத்தில் திடீர் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மகபூப் பாஷா என்பவரின் அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு ஈராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ்-யின் கிளை அமைப்பாக அல்ஹிந்த் எனும் புதிய அமைப்பு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அமைப்பை சேர்ந்த மகபூப் பாஷா, கடலூரை சேர்ந்த காஜா முகைதீன் உள்ளிட்டோரை கைது செய்த என்ஐஏ, கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்கள் அடங்கிய ( Karnataka, Tamil Nadu, Andhra Pradesh and Kerala) தென்னிந்திய வனபகுதியில் தங்களுக்கென தனி மாகாணத்தை ஏற்படுத்த அல்ஹிந்த் அமைப்பினர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத பயிற்சிக்கு எந்த வனபகுதியை தேர்வு செய்யலாம், அல்ஹிந்த் அமைப்பினர் எங்கு பதுங்கி இருக்கலாம், அங்கு தங்களுக்கென தனி மாகாணத்தை எங்கு உருவாக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரா பகுதிக்கு சென்றதாகவும், கூடாரங்கள், ரெயின் கோட்டுகள், ஏணிகள், வில்லுகள், அம்புகள், வனபகுதியில் நடக்க பயன்படும் காலணிகள், கத்திகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கண்ணிவெடிகளை தயாரிக்க அதிக எண்ணிக்கையில் பட்டாசுகளை வாங்கியதாகவும் கூறியுள்ளது.
பதுங்கியிருப்பதற்கு கர்நாடாகவில் கோலார், குடகு உள்ளிட்ட பகுதிகள்,குஜராத்தில் ஜம்பூசார், மகாராஷ்டிராவில் ரத்னகிரி, ஆந்திராவில் சித்தூர், மேற்குவங்கத்தில் பர்துவான், சிலிகுரி ஆகிய இடங்களை அல்ஹிந்த் அமைப்பினர் தேர்வு செய்ததாகவும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்து மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க தனிநபர்களை கொலை செய்துவிட்டு, பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக காட்டிற்குள் பல ஆண்டுகளாக பதுங்கி வாழ்ந்து வந்த வீரப்பன் தொடர்புடைய புத்தகங்களை அந்த தீவிரவாதிகள் வாங்கி படித்ததையும் என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.