எல்லைப் பகுதிகளில் அதிநவீன, பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்ஒர்க்கை உருவாக்க 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
செயற்கைக்கோள்கள், ஆப்டிக்கல் ஃபைபர், மைக்ரோவேவ் ரேடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ராணுவத்திற்கான பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்ஒர்க்கை உருவாக்கும் அஸ்கான் திட்டத்தின் நான்காம் கட்டம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
இந்த திட்டத்திற்கு, பாதுகாப்புத் துறை அமைச்சரவை குழு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் கீழ் வரும், Indian Telephone Industries Limited என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக 7 ஆயிரத்து 796 கோடி ரூபாய் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சர்வதேச எல்லை, பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு ஆகிய பகுதிகளில் நெட்ஒர்க் கவரேஜை இந்த திட்டம் மேம்படுத்தும்.
இதேபோல, ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை தயாரித்து வழங்க, நாக்பூரை சேர்ந்த EEL என்ற தனியார் நிறுவனத்துடனும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
409 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரண்டாம் உலகப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கையெறி குண்டுகள் மாற்றப்பட்டு, நவீன கையெறி குண்டுகள் ராணுவத்திற்கு வழங்கப்படும்.