உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் வசித்து வந்த கிராமம் சீல்வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல முயன்று கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குரூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் நடந்து செல்ல முயன்றபோது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தம்மை காவல்துறையினர் புதரில் தள்ளி தாக்கியதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
தடையை மீறிச் செல்ல முயன்றதாக ராகுல் மற்றும் பிரியங்கா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த கிராமம் சீல் வைக்கப்பட்டு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த இளம் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.