மத்திய அரசின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, டிஜிட்டல் வடிவ ஓட்டுனர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் நகல் உள்ளிட்டவை இன்று முதல் சட்டப்படி செல்லுபடியாகும்.
செல்போன் செயலிகளில் டிஜிட்டல் வடிவில் உள்ள ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று, பெர்மிட்டுகள், இன்சூரன்ஸ், மாசுக் கட்டுப்பாட்டு சான்று உள்ளிட்டவற்றை ஏற்குமாறு, மத்திய அரசு கடந்த ஆண்டே அறிவுறுத்தியிருந்தது.
இதற்கேற்றவாறு, மோட்டார் வாகன விதிகளை மத்திய அரசு தற்போது திருத்தியுள்ளது.
எனவே, டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் காப்பி உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
எம்-பரிவாகன் அல்லது டிஜிலாக்கர் ஆப்களில் அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம்.
திருத்தப்பட்ட விதிகளின்படி, இந்த டிஜிட்டல் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும் என்பதால், போக்குவரத்து துறை அதிகாரிகளோ, போலீசாரோ காகித வடிவில் உள்ள ஆவணங்களை காட்டுமாறு வற்புறுத்தக் கூடாது.
ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டிய விதிமீறல்களின்போதும், காகித வடிவிலான ஆவணங்களை கேட்கக் கூடாது.
அதேசமயம், டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் காப்பி போன்றவற்றை ஃபோட்டோகாப்பி எடுத்து வைத்திருந்தால் அது செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சாலை விபத்துகளின்போது, தொண்டுள்ளத்தோடு உதவ வருபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை காவல்துறையினரோ வேறு பிறரோ கேட்டு வற்புறுத்தக் கூடாது என மோட்டார் வாகன சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
காயம் அல்லது உயிரிழப்பு போன்ற ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் சூழலில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அல்லது வேறு வழிகளில் உதவ முன்வருபவர்கள் மீது, சிவில் அல்லது கிரிமினல் வழக்கு பதியக் கூடாது எனவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கு வருபவர்கள் பாரபட்சமின்றி மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என மோட்டார் வாகன சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.