போதைப்பொருள் பயன்படுத்திய புகார் தொடர்பான வழக்கில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப்பொருள் வாங்கிக்கொடுத்ததாக நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக டேலன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் ஜெயா சஹா என்பவர் மீது புகார் எழுந்தது.
இதனை அடுத்து ஜெயா சஹாவை வரவழைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்து நடிகைகள் சிலருக்கு போதைப் பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்படி ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் போதைப் பொருள் வேண்டும் என்று ஜெயா சஹாவிடம் கேட்கும் சாட்டிங் விவரம் அதிகாரிகளுக்கு கிடைத்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த வாட்ஸ்ஆப் குழுவின் அட்மினாக நடிகை தீபிகா படுகோனே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகை தீபிகாவை விசாரிக்க முடிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் தீபிகா ஆஜராகியுள்ளார்.
அவரிடம் ஜெயா சஹாவுடன் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெயா சஹா - தீபிகா படுகோனே இடையிலான போதைப்பொருள் வாட்ஸ்ஆப் குரூப் சாட்டிங் தொடர்பாகவும் அதிகாரிகள் விவரங்களை திரட்டி வருகின்றனர்.
மேலும் நடிகை தீபிகாவுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறதா என்பதை கண்டறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை தீபிகாவை தொடர்ந்து நடிகைகள் சாரா அலிகானை அதிகாரிகள் இன்று விசாரிக்க உள்ளனர். முன்னதாக நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் அதிகாரிகள் நான்கு மணி நேரம் விசாரித்தனர்.
நடிகை தீபிகாவை தொடர்ந்து நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் விசாரணைக்கு ஆஜரானார்.
கேதார்நாத் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ரியா சக்ரபோர்த்தி, மும்பை நீதிமன்றத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருந்த நிலையில், அந்த திரைப்படத்தில் நடித்தவரான சாரா அலி கானிடம் சுஷாந்த் மற்றும் ரியா உடனான தொடர்பு குறித்தும், சுஷாந்த்க்கு போதைப்பொருள் வாங்கிக்கொடுத்ததில் சாராவுக்கு பங்கு உண்டா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.