குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இந்தியா சிறப்பாகப் பணியாற்றியதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்காக பல நாடுகள் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை அதிகரிப்பது, கட்டாய திருமணத்தைத் தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தி வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பாலின சமத்துவத் திட்டங்களால் குழந்தைத் திருமணம், முன்கூட்டிய திருமணம், கட்டாயத் திருமணம் ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காகவும், அத்தகைய திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் வகையிலும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.