மும்பையில் விடியவிடியப் பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்றுப் பகலும் இரவும் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கோரேகானில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம்போல் காட்சியளித்தது.
மாதுங்காவில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் பேருந்து சிக்கிக் கொண்டது. தண்ணீரில் மூழ்கிய நிலையில் பேருந்தை இயக்க முடியாததால் அதிலிருந்த பயணிகள் அரையளவு தண்ணீரில் இறங்கிக் கைகோத்து நடந்து அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.
சயான் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் நடைமேடையில் பலமணி நேரம் காத்திருந்தனர். மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தானேயில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே புறப்பட்டுச் செல்கின்றன.
சர்ச்கேட், மும்பை சென்ட்ரல், மாதுங்கா, அந்தேரி ஆகிய ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மேற்கு ரயில்வேயிலும் புறநகர் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை சென்ட்ரல், பாந்த்ரா ஆகிய நிலையங்களில் இருந்து பிற நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்றியமையாப் பணிகள் தவிர மற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்றியமையாத் தேவையின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை சென்ட்ரலில் உள்ள நாயர் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ள பொருட்கள், தண்ணீரில் மிதந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. நாயர் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.