மும்பையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்துள்ளது. நகரின் மையப் பகுதியான லோயர் பரேல், சயான், மாதுங்கா, குர்லா, அந்தேரி, கோரேகான் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இரு சக்கர வாகனங்களும் கார்களும் லாரிகளும் தண்ணீரில் பழுதாகி நின்றன.
ரயில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சயான் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
மழை காரணமாக தானே, வாஷி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த மழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் முழங்கால் வரை வெள்ளம் புரண்டு ஓடியது. பாலங்களுக்குக் கீழும் தண்ணீர் ஓடியது.
இன்றும் மும்பையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை அல்லது கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.