கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபப்ட்ட ஊரடங்கை தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, அதேசமயம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் வழங்கி வருகிறது.
தீவிர நடவடிக்கைகளின் பேரில் நோய்த்தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார். காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், போன்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.