நாடாளுமன்ற வளாகத்தில் 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் எம்.பி.க்களுக்கு, மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ், தேநீர் எடுத்து சென்று பரிமாறினார். ஊடகத்தை கையோடு அழைத்து வந்து விளம்பரப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அந்த தேநீரை எம்.பி.க்கள் ஏற்க மறுத்த நிலையில், ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில், துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தலைமையில், வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது கடும் அமளி மற்றும் ரகளை ஏற்பட்டது.
ரகளையில் ஈடுபட்ட, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் 8 பேரை, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒருவார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கையை கண்டித்து 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ள்ளனர். அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கினர். தர்ணாவின்போது பாட்டு பாடி உற்சாகமடைந்தனர்.
இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ், காலை நேரத்தில் தேநீர் எடுத்து வந்து பரிமாறினார்.