புதிய சவால்களை எதிர்கொள்ள ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை என ஐ.நா. பொதுச்சபையின் 75-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உயர் மட்டக் கூட்டம் கொரோனா தொற்றின் காரணமாக காணொலி மூலம் நடைபெற்றது.
இதில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து நாடுகளும் சமகால சவால்களைச் சந்திக்கும் வகையில் திறன் மேம்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மனித நலனில் கவனம் செலுத்தும் சீர்திருத்த பன்முகத்தன்மை தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஐநா சபையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய பிரதமர், ஐநா கொடியின் கீழ் அமைதிகாக்கும் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், மோதலைத் தடுப்பதிலும் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதிலும், சமத்துவமின்மையைக் குறைப்பதிலும் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இந்தியா வெகுவாக முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டிய அவர், விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐ.நா சபை நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் கூறினார்.
உலகமே நமது குடும்பம் எனப் பொருள்படும் வாசுதேவா குடும்பகம் என்ற தத்துவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.