மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 மசோதாக்களும் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மாநிலங்களவையில் தற்போது 243 எம்பிக்கள் உள்ளனர். மசோதா நிறைவேற இவர்களில் 122 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணிக்கு 105 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.
இதனிடையே மாநிலங்களவை எம்.பி.க்களில் 10 பேருக்கு கொரோனா இருப்பதால் அவர்கள் அவைக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்.பி.க்களும், பிஜூ ஜனதாதள கட்சிக்கு 9 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் நிறைவேறும் என மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.