மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வை சமாளிக்க கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதன் மூலம், அத்திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசு நலத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக கூடுதலாக 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான, துணை மானியக் கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், துணை மானியக் கோரிக்கையில் இத்தகைய பெரும் தொகையை கேட்பது இதுவே முதல்முறை எனவும், இதன் மூலம் ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதி கொரோனாவால் நலிவடைந்துள்ள மக்களுக்கான நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே சுமார் 61 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஊதிய உயர்வை சமாளிக்கும் நோக்கில் கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இத்திட்டத்திற்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
கரிப் கல்யான் யோஜனா மற்றும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உயர்த்தப்படுவதாக கூறினார்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும், கொரோனா தொகுப்பாக அறிவிக்கப்பட்டதில் இதுவரை, 3 கோடி மூத்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் முன்னெடுத்துள்ள டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக ஏழை எளிய மக்களுக்கான உதவித்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ள டிமேட் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, மக்களுக்கு பொருளாதாரத்தின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக கூறினார்.
மேலும், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்க வேண்டிய பொறுப்பை ஒருபோது தட்டி கழிக்கவில்லை என்றும், அதுதொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.