நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஊதியங்கள், சலுகைகளை 30 விழுக்காடு குறைப்பதற்கான சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
கொரோனா சூழலில் அரசின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒரு மசோதாவும், அமைச்சர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒரு மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றின் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினர்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்தை நிறுத்தி வைக்கலாம் எனச் சிலர் கூறினர். அதன்பின் குரல் வாக்கெடுப்பில் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.