அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து செல்லும் பெரிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயனாளர் கட்டணம் பெற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
விமானப் பயணக் கட்டணத்தில் விமான நிலையக் கட்டணத்தைப் பெறுவதைப் போன்று, ரயில் கட்டணத்துடன் பயனாளர் கட்டணத்தையும் சேர்த்துப் பெற முடிவு செய்துள்ளனர். இதனால் இப்போதுள்ளதைவிடக் கட்டணம் சிறிதளவு அதிகரிக்கும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டணத்தால் கிடைக்கும் தொகை, நிலையத்தின் புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஏழாயிரம் ரயில் நிலையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 700 முதல் ஆயிரம் நிலையங்களில் பயனாளர் கட்டணம் பெறப்பட உள்ளதாகவும் வினோத்குமார் யாதவ் தெரிவித்தார்.