வேளாண் துறை சார்ந்த 3 சட்ட மசோதாக்களை விவசாயிகள் ஏன் எதிர்க்கின்றனர் என்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம்....
வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்களைப் பொருளியல் வல்லுநர்கள் பாராட்டும் அதே வேளையில் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
வேளாண் விளைபொருட்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி விற்கவும், வாங்கவும், இருப்பு வைக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது. உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கே விளைபொருட்களை விற்க வேண்டும் என்பதால் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் கிடைக்கும் அதே நேரத்தில், அதிகத் தேவை இருக்கும்போது அதிக விலையைப் பெற முடியாமல் போகும்.
இந்தச் சட்டங்கள் ஒப்பந்தப் பண்ணை முறையைக் கட்டமைக்கும் வகையில் உள்ளதால் விவசாயிகளின் தன்னிறைவு, சுதந்திரம் பாதிக்கப்பட்டுப் பெரு நிறுவனங்களுக்காகப் பொருட்களை விளைவிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களாக மாறிப்போகும் நிலை ஏற்படும் என குற்றம்சாட்டப்படுகிறது.
முந்தைய 12 மாதங்கள், அல்லது கடந்த 5 ஆண்டுகளில் இருந்த சராசரி விலையைவிட, கெட்டுப்போகும் தன்மையுள்ள பொருட்களின் விலை நூறு விழுக்காடும், கெட்டுப்போகாத தன்மையுள்ள பொருட்களின் விலை ஐம்பது விழுக்காடும் உயரும்போது மட்டும் இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்தும் என்பதால் வணிகர்கள் விளைபொருட்களைப் பதுக்கவும், வரம்புக்குட்பட்டு விலையை உயர்த்தவும் வழிவகுக்கும்.
வேளாண் விளைபொருள் கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் பெரு நிறுவனங்களின் முற்றுரிமைக்கு வழிவகுக்கும் என்பதாலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கொள்முதல் செய்யும் முறையைப் பாதிக்கும் என்று கூறியும் இதை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் ஓரளவு லாபத்துக்கு விளைபொருட்களை விற்கும் முறைக்கு முடிவுகட்டப்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.