லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய சீன ராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு புறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி வரும் போதும் மறுபுறம் படைகளைத் திரும்பப் பெற மறுத்து வருகிறது.சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன.
சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை விரட்டி விட சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது.
எல்லையில் பதற்றத்தைக் குறைப்பதற்காக பிரிகேடியர் மட்டத்தில் இருநாடுகளிடையே கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் நேற்று வரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில, நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அடுத்த சில நாட்களில் கமாண்டர்கள் மட்டத்திலான 6 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது மாஸ்கோவில் மேற்கொள்ளப்பட்ட 5 அம்ச உடன்படிக்கையின் படி நேருக்கு நேர் படைகள் நிற்கும் இடங்களில் படைக்குறைப்பில் சீனா ஈடுபடுமா என்பதைப் பொருத்தே எல்லையில் அமைதி திரும்பும் என்று கூறப்படுகிறது.