இந்தியா- சீனா எல்லைப் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாக நடத்திய பேச்சுவார்த்தை காரசாரமான விவாதத்தில் முடிவடைந்தது.
மாஸ்கோவில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபிங்கேவுடன் (Wei Fenghe) மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்திய போதும், இருதரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டில் சீனப்படைகள் பின்வாங்க வேண்டும் என்றும் ஆக்ரமிப்பு இல்லாத சூழல்தான் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சீன வீரர்கள் வாள், கேடயம், குறுவாள், ஈட்டி போன்றவற்றுடன் கிழக்கு லடாக்கின் முக்பரி சிகரம் மற்றும் ரேசாங் லா ஆகிய இடங்களில் திரண்டனர். இதனைத் தடுக்க முயன்ற இந்தியப் படையினரை மிரட்டும் விதத்தில் சீனப்படையினர் நடந்து கொண்டதால், எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இதையடுத்து பிரிகேடியர் அந்தஸ்துடைய இருநாட்டு உயர் அதிகாரிகளும் ஹாட்லைன் தொலைபேசியில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீனா கற்களை அடுக்கி தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்கும் படைகளை முன்னகர்த்தி வருவதற்கும் இந்தியா ஆட்சேபம் தெரிவித்ததாகவும், இதற்கு சீனா தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படைகளைக் குவிப்பது குறித்து இரு நாடுகளும் புகார் கூறியதால் பேச்சுவார்த்தை காரசாரமான மோதலுடன் முடிவு பெற்றது.
எல்லையில் நிலவும் சூழல் மற்றும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத சூழல் காரணமாக மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாளை நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.