விவசாயிகளை மிரட்டியும், பொருட்களை உருட்டியும், கடன் தொகையை வசூலிப்பதில் கெத்துக் காட்டும் வங்கி அதிகாரிகள் சிலர் ஒரு அடாவடி பெண்ணிடம் சிக்கி அவரது பலாத்கார மிரட்டலுக்கு பயந்து காலில் விழுந்து கெஞ்சி தப்பிய நிகழ்வு பெங்களூருவில் அரங்கேறி இருக்கின்றது.
ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கிக் கொண்டு நாட்டை விட்டே டாட்டா காட்டி சென்றவர்களிடம் எல்லாம் கடனை வசூலிக்க நீதிமன்ற படிக்கட்டுக்களை ஏறி இறங்குவதை வாடிக்கையாக்கி இருக்கின்றனர் நம்ம ஊர் வங்கி அதிகாரிகள்..!
ஆனால் சில ஆயிரங்களை கடனாக பெற்ற விவசாயிகளோ, மாத சம்பளக்காரர்களோ 3 தவணை செலுத்த தவறினால் போதும் தங்கள் படை பரிவாரங்கள் சூழ கடன் வாங்கியவரின் வீட்டுக்கே சென்று மிரட்டுவதும், அங்குள்ள பொருட்களை தூக்குவதும் என்று தங்களால் முடிந்த அளவு டார்ச்சர் கொடுப்பது அவர்களது வாடிக்கை..!
அந்த வகையில் பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த சங்கீதா கோபால் என்பவர் எஸ்.ஜி.ஜி.சி என்ற தனியார் வங்கியில் பெற்றிருந்த கடனை ஊரடங்கு காரணமாக செலுத்த இயலாமல் இருந்துள்ளார். அவரது வீட்டுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால் வங்கி அதிகாரிகள் சிலர் படை பரிவாரங்களோடு சங்கீதாவின் வீட்டுக்கு சென்று கடனை வட்டியுடன் திருப்பிக் கேட்டுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நொடி தீப்பொறி பட்ட பட்டாசாக, ஆங்கிலம், கன்னடம், தமிழ் கலந்த வார்த்தைகளால் வங்கி அதிகாரிகளை வறுத்தெடுக்க தொடங்கினார் சங்கீதா.
ஒரு கட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்ய வந்ததாக போலீசில் புகார் செய்வேன் என்று கூறி அதிர வைத்ததோடு ஒரு அதிகாரியை கையால் தள்ளி விட்டு தன்னை பலாத்காரம் செய்வதாக கூச்சல் போட்டு வந்திருந்த வங்கி அதிகாரிகளை வெட வெடக்க வைத்தார் சங்கீதா..!
இடை இடையே சங்கீதாவின் சவுண்டில் சில கெட்ட வார்த்தைகளும் தெறித்ததால் அவரது காலில் விழுந்து சீனியர் வங்கி ஆபீசர் ஒருவர் மன்னிப்புக் கேட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சி அடிப்படையில் இந்திரா நகரை சேர்ந்த பிரியா என்ற சமூக ஆர்வலர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சங்கீதா பெண் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி பலாத்கார புகார் கொடுப்பேன் என்று வங்கி அதிகாரிகளை மிரட்டியுள்ளது கண்டிக்கதக்கது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தங்களுக்கு நேர்ந்த திகில் சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளும் சங்கீதா மீது புகார் அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் கடன் பெற்ற அனைவரையும் ஒரே மாதிரி அணுகாமல், ஆளுக்கு தகுந்தாற் போல கடன் வசூலிக்கும் நடவடிக்கையை வங்கி அதிகாரிகள் மாற்றிக்கொள்வதால் தான் இது போன்ற சர்ச்சைகள் எழுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.