உள்நாட்டிலேயே முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஒலியை மிஞ்சும் வேகத்தில் இயங்க கூடிய HSTDV எனப்படும், ஆளில்லா விமானம் போன்ற அமைப்பை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து, இந்த ஏவுகணை வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
அக்னி ஏவுகணை பூஸ்டர் வாயிலாக ஹைபர்சோனிக் ஏவுகணை 30 கி.மீ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு, ஹைபர்சானிக் ஏவுகணை தனியாக பிரிந்ததும், அதில் உள்ள ஸ்கிராம்ஜெட் என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது. இதையடுத்து, அந்த ஏவுகணை அதிவேகமாக உந்தப்பட்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. இதன் மூலம் 20 நொடியில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தை எட்டக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆற்றலை பெற்று, இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை படைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகளை தயாரிக்க இந்தியாவுக்கு உதவும். இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு ஸ்கிராம்ஜெட் எஞ்சினுடன், ஹைபர்சானிக் ஏவுகணையை உருவாக்கும் திறனை டிஆர்டிஓ பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் என்றும், அவற்றை எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, டிராக் செய்யவோ முடியாது என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைத் தொடர்ந்து, ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சில நாடுகள் மட்டுமே கொண்டிருந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.