சீன எல்லையில் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் பயணமாக லடாக் சென்றுள்ள அவர், லே நகரில் உள்ள ராணுவ முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களையும், படையினரின் தயார் நிலையையும் நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய நரவானே, சீனா உடனான எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது என்றார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாக கூறிய அவர், எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மன உறுதியுடன் உள்ளனர் என்றார். எல்லா சவால்களையும் சந்திக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
சீனாவுடனான எல்லை பதற்றத்தை தணிக்க ராணுவ மற்றும் ராஜங்க ரீதியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நரவானே தெரிவித்தார்.