இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இந்திய எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை இரண்டே நாள்களில் அணைத்து இந்திய கடலோரக்காவல் படை கப்பல்கள் சாதனை படைத்தன.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ள தி நியூடைமண்ட் என்ற டேங்கர் கப்பல் குவைத் நாட்டிலிருந்து 2,70,000 டன் எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒடிசா மாநிலத்திலுள்ள பாரதீப் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் 70 கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த போது, செப்டம்பர் 3 -ஆம் தேதி கப்பலின் இன்ஜீன் அறையில் தீ பிடித்து மளமளவென பரவியது. இன்ஜீன் அறையிலிருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியதில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமி ஒருவர் இறந்து போனார்.
விபத்தையடுத்து, இலங்கை கடற்படையைச் சேர்ந்த விமானங்கள் உடனடியாக தி நியூடைமண்ட் கப்பலில் பிடித்த தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கப்பற்படை உதவி கேட்டதையடுத்து , இந்திய கடலோர பாதுகாப்புப்படையை சேர்ந்த சௌர்யா, சாரங், சுமுத்திர பாகிரதர் கப்பல்கள் மற்றும் ஒரு டர்னியர் விமானம் தீ பிடித்த கப்பல் இருந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரு கப்பல்களும் மீட்புப்பணிக்கு விரைந்தன. தொடர்ந்து இரு நாள்களாக கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பண நடைபெற்றது. இந்த போராட்டத்தின் முடிவில் கப்பலின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் ஒருவர் இறந்து விட மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கப்பலில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தீ பரவுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. தற்போது, கடலில் கப்பல் மூழ்குவதை தடுக்கவும் அதிலிருக்கும் எண்ணெயை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.