கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக இந்திய அரசு மற்றும் மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ரஷ்யன் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ், வரலாற்று ரீதியாக ரஷ்யா - இந்தியா முக்கிய கூட்டாளியாக இருக்கின்றன என்றார். உலக அளவில் 60 சதவிகித தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்தியாவில் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை தயாரிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.