தெலுங்கானா மாநிலத்தில் கால்வாய் விரிவாக்கப் பணிகளுக்குச் சென்ற அதிகாரிகளைத் துப்பாக்கிகளைக் காட்டி முன்னாள் அமைச்சர் ஒருவர் விரட்டியடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா கிராமக் கால்வாய் விரிவாக்க பணிகளை மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தி இழப்பீடுகளையும் வழங்கியுள்ளது தெலுங்கானா மாநில அரசு.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டிக்குச் சொந்தமான, அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் விரிவாக்கப் பணியை மேற்கொள்ள அதிகாரிகளும் பொறியாளர்களும் பொக்லைன் இயந்திரங்களுடன் சென்றனர். அப்போது அங்கு வந்த குத்தா மோகன் ரெட்டி கால்வாய் விரிவாக்கப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தார். அத்துடன் இல்லாமல் தனது கைத் துப்பாக்கியைக் காண்பித்து அதிகாரிகளை மிரட்டினார். துப்பாக்கியைப் பார்த்ததும் மிரண்டுபோன அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றனர்.
அப்போது அமைச்சரின் அடாவடித்தனத்தை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். அதைப் பார்த்த முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் அந்த ஊழியரைக் கடுமையாகத் தாக்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த ஒப்பந்தக்காரர், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தற்போது, தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.