கேரளாவின் அறுவடைத் திருநாளாம் ஓணம் பண்டிகை இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவுபெறுகிறது.
தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். பலவகை ருசியான உணவுகள் சமைத்து உண்டு இந்த நாளை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.
பருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.
கொரோனா ஊரடங்குக் காலங்களில் சமூக தனி நபர் இடைவெளிகளைக் கடைபிடித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தி, இணக்கமும், செழிப்பும் நிறைந்த வாழ்வுக்கு வழிகாட்டும் என குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஓணம் பண்டிகையின் உற்சாகம் பல வெளிநாடுகள் வரை பரவியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.