கர்நாடக மாநிலம் பெங்களூரில் நட்சத்திர விடுதியில் போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, நடிகர்கள், இசைக்கலைஞர்கள் சிலரை போதைபொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாண் நகர் பகுதியில் அமைந்துள்ள ராயல் சூட்ஸ் உணவு விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போதைபொருள் தடுப்பு பிரிவினர், எக்டசி எனும் போதை மாத்திரைகள் மற்றும் 2 கோடியே 20 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் போதைபொருள் கடத்தல் கும்பல் தலைவியாக செயல்பட்ட பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்ததோடு, அந்த பெண்ணின் வீட்டில் இருந்த போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர்கள், இசைக் கலைஞர்கள் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.