பா.ஜ.க ராஜ்ய சபா உறுப்பினரான சுப்ரமணிய சுவாமி டுவிட்டரில் ’நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்துத் தகுந்த ஆலோசனை கூறும் கல்வியாளர்கள் ஒருவரைக் கூட பிரதமர் பெற்றிருக்கவில்லை’ என்று சாடியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றால் பொதுமக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மத்திய அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை நடத்த முழுவீச்சில் தயாராகிவருகிறது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க எம்.பி சுப்ரமணிய சுவாமி நீட் தேர்வுகளை தற்போது நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், ‘இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் எனக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்குத் தேவையான வசதிகள் தற்போது இல்லை. தற்போது தேர்வு நடத்தப்பட்டால் பல இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமாகிவிடுவீர்கள். தீபாவளிக்குப் பிறகு தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மத்திய அரசு நீட் தேர்வுக்கான ஆயத்தப்பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில் தான், ‘பிரதமர் தகுந்த ஆலோசனை கூறும் கல்வியாளர்களைப் பெற்றிருக்கவில்லை. தவறான ஆலோசனைகளை மோடி பெற்றுள்ளார். ஹார்வார்டு பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி டெல்லியில் 50 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணிபுரியும் என்னிடம் ஒரு முறை கூட இதுவரை ஆலோசனையைக் கேட்கவில்லை’ என்று டுவிட்டரில் சுப்ரமணிய சுவாமி அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
சுப்ரமணிய சுவாமி, நேற்று டுவிட்டரில், கடந்த ஐந்து மாதங்களாகவே ஏழை மற்றும் நடத்தர மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் நடத்தத்தான் வேண்டுமா?’ என்று கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.