கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆயினும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும மாநிலம் முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மம்தா பானர்ஜி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உள்நாட்டு விமானங்களுக்கும் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா பாதிப்பு அதிகமுடைய பகுதிகளில் இருந்தும் விமானங்களை இயக்க ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு முன்பு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். செப்டம்பர் 7, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.