கொரோனா வைரஸ் பரவலால் சாமானியன் ஒவ்வொருவனும் பாதிக்கப்பட்டுள்ளான். பலர் வேலையை இழந்து, வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா பொது முடக்கத்தால் பொது மக்களைப் போலவே கோயில்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. நிதி நெருக்கடியைச் சமாளிக்கக் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கோயில் நகைகளை வங்கியில் அடகு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .
கேரளா முழுவதும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் 1200 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கொரோனா பொது முடக்கத்தால், ஐந்து மாதங்களாகவே பொதுமக்கள் கோயில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செல்வச் செழிப்பு மிக்க கோயில்கள் பலவும் தற்போது வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ரூ. 400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடியாத அளவுக்கு நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளது.
நிதிச் சிக்கலைச் சமாளிக்க, சபரிமலை கோயிலில் உள்ள தங்கத்தை அடகு வைத்து நிதி திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயர் அதிகாரிகள் அணுகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கேரள கோயில்களில் பயன்படுத்தாத பொருள்கள், விளக்குகள் ஆகியவற்றை ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கோயில்கள் பலவும் இப்போது ஆன்லைன் தரிசனம், ஆன்லைன் ஆரத்தி ஆகியவற்றின் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.