கொரோனா பேரிடரால் கடன் தவணை செலுத்துவதைத் தள்ளி வைத்த 6 மாதக்காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிக் கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவதை மார்ச் முதல் ஆகஸ்டு வரை 6 மாதக் காலத்துக்குத் தள்ளி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்தக் காலத்தில் கடன்மீதான வட்டிக்கு வட்டி கணக்கிடப்பட்டு முதலில் சேர்க்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இந்நிலையில் கடன் தள்ளிவைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரித் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக்பூசண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், வங்கிகளுக்குச் சார்பாகவும் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். போதிய அதிகாரங்கள் உள்ளபோதும், மத்திய அரசு உரிய முடிவெடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்துகொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடன் தவணை செலுத்துவதைத் தள்ளி வைத்த 6 மாதக்காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதா, வட்டி மீதான வட்டியைத் தள்ளுபடி செய்வதா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வணிகத்தை மட்டுமே எண்ணிப் பார்க்காமல், மக்களின் நிலையையும் அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.