இமாசல பிரதேசத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையே 8 புள்ளி 8 கிலோ மீட்டருக்கு கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை, செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கப்படவுள்ளது.
2000ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டபோதிலும் 2011ல்தான் பணி தொடங்கப்பட்டது. அப்போது திட்ட மதிப்பு 1,700 கோடி ரூபாயாக இருந்தநிலையில் பிறகு 3,200 கோடி ரூபாயாக அதிகரித்தது. அந்த சுரங்க பாதை, ரோடங் பாதை எனவும், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக அடல் சுரங்க பாதை எனவும் அழைக்கபடுகிறது.
அது பயன்பாட்டுக்கு வந்ததும், மணாலி - லே இடையிலான 474 கிலோ மீட்டர் பயண தூரம் 46 கிலோ மீட்டராகவும், எட்டரை மணி நேர பயணம், இரண்டரை மணி நேரமாகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மலை பகுதி அழகை கண்டுரசிக்க கண்ணாடி மேற்கூரை கொண்ட பேருந்துகளை அந்த பாதையில் இமாசல பிரதேசம் இயக்கவுள்ளது. அப்பாதையில் நாளொன்றுக்கு 3,000 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியும்.