கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தங்கக் கடத்தல் ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தின் 2வது தளத்தில் உள்ள, பொது நிர்வாக துறை அலுவலகத்தில் கணினியிலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், யாருக்கும் காயம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அண்மையில் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிப்பதற்காக திட்டமிட்டே தீ வைக்கப்பட்டதாக, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த தலைமைச் செயலாளர் விஷ்வாஸ் மேத்தா போராட்டக்காரர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால், ஆவணங்கள் அழிக்கப்படுவதாக தொடர்ந்து முழக்கமிட்டதால், பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.
இதனிடையே, விபத்தில் எந்த முக்கிய ஆவணங்களும் எரியவில்லை என்று தலைமைச் செயலாளர் விஷ்வாஸ் மேத்தா தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் அணியினர், தலைமைச் செயலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலைந்து செல்ல மறுத்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கோழிக்கோடு உள்ளிட்ட கேரளாவில் பல்வேறு இடங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இந்த தீ விபத்து தொடர்பாக முறையான விசாரணை வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் மாநில ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.