மகாராஷ்டிரத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளில் மேலும் 18 பேர் சிக்கியுள்ள நிலையில், 2ஆவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராய்கட் மாவட்டத்தில் மஹத் நகரின் கஜல்புரா பகுதியில், தி தாரிக் கார்டன் என்ற 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருந்தது. இதில் 40 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், மேலிருந்து 3 தளங்கள் நொறுங்கி விழுந்துள்ளன.
ஆனால் அதற்கு முன்பாகவே ஆபத்தை உணர்ந்து அங்கு குடியிருந்த பலர் தப்பி வெளியேறிவிட்டனர். ஆனால் கட்டிம் இடிடிந்து விழுந்த பிறகு இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், 17 பேர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் கட்டிடம் இடிந்துவிழுந்தபோது அவ்வழியே சென்றவர்.
மேலும் 18 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கருதப்படுவதால், மீட்புப் பணி 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர அமைச்சர்கள் ஏக்நாத் ஷின்டே (Eknath Shinde), அதிதி தத்கரே (Aditi Tatkare) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், கட்டிடத்தை வடிவமைத்தவர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தப்படும் என்று, அமைச்சர் அதிதி தத்கரே தெரிவித்துள்ளார். கட்டிட விபத்து குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளனர்.