மகாராஷ்டிரத்தில் இரண்டாவது அலையாக கொரோனா பரவுவதைத் தடுக்க சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைத் தயார்படுத்தி வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. இந்நிலையில் புனேயில் 800 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தைக் காணொலியில் திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கொரோனா இரண்டாவது அலையாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஒருவேளை கொரோனா இரண்டாவது அலை பரவினால், அதை எதிர்த்துப் போராடும் வகையில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை அரசு தயார்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். விநாயகர் ஊர்வலம், பரியூசன், முகரம் ஆகியவை வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானவை எனவும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.