ஓய்வூதியம் அடிப்படை உரிமை என்றும், சட்டப்படி அல்லாமல் அதைப் பிடித்தம் செய்ய முடியாது என்றும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.
படைக்கலத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி 1994ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற நைனி கோபால் என்பவருக்குத் தவறுதலாக 2007ஆம் ஆண்டில் இருந்து கூடுதலாக மாதத்துக்கு 782 ரூபாய் செலுத்தப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வூதியச் செயலாக்க மையம் தெரிவித்தது.
இதற்காக அவரிடம் இருந்து 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயைத் திரும்பப் பெற முடிவு செய்து, அவரின் ஓய்வூதியக் கணக்கில் இருந்து மாதம் 11 ஆயிரத்து 400 ரூபாயைப் பிடித்துக் கொண்டே வந்தது.
இதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில், ஓய்வூதியம் நிர்ணயித்ததில் எந்தப் பிழையும் இல்லை எனப் படைக்கலத் தொழிற்சாலை தெரிவித்த பின்னும், அதைப் பிடித்தம் செய்ய எந்தக் காரணமும் கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓய்வூதியத்தை வங்கி நிர்ணயிக்க முடியாது எனக் கூறியதுடன், ஓய்வூதியம் அடிப்படை உரிமை என்றும், சட்டப்படி அல்லாமல் அதைப் பிடிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதனால் மனுதாரரின் கணக்கில் இருந்து தொகையைப் பிடிப்பதை நிறுத்தவும், இதுவரை பிடித்த தொகையைத் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டனர்.