திருவனந்தபுரம் விமான நிலையப் பராமரிப்பு அதானி குழுமத்திற்கு வழங்கியது ஏன் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.
அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பொதுமற்றும் தனியார் பராமரிப்புக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை குத்தைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்பபுத் தெரிவித்து இந்த முடிவை திரும்பப் பெறும் படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று கேரளாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அமைச்சரவை இம்முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக உள்ளிட்ட அனைத்து கேரள மாநில அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் டிவிட்டரில் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு விடும் முடிவு நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்ததாகவும் பராமரிப்பை ஏற்க முன்வந்தவர்களில் கேரள அரசின் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பான KSIDC பத்து சதவீத தகுதியைப் பெற்றிருந்தால் கூட பராமரிப்புப் பணியை அதனிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும் அதானி குழுமத்திற்கும் கேரள அரசின் நிறுவனத்திற்கும் இடையே 19 சதவீத இடைவெளி இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
விமான நிலையப் பராமரிப்பு தகுதியை கேரள அரசு பெறவில்லை என்பதையும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.