பிரசாந்த் பூசண் தனது அவமதிப்பு கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் 3 நாள் கெடு விதித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்குப் பிரசாந்த் பூசணுக்குத் தண்டனை வழங்குவது குறித்த வாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை, தண்டனை அறிவிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பிரசாந்த் பூசண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தண்டனையை அறிவித்தால்தான் தீர்ப்பு முழுமைபெறும் என்றும், சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை தண்டனை செயல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தனர். நீதித்துறையை மேம்படுத்தும் முயற்சியாகத் தன் கருத்துக்களைப் பார்க்க வேண்டும் எனப் பிரசாந்த் பூசண் தெரிவித்தார்.
ஒருவர் நூற்றுக்கணக்கான நற்பணிகளைச் செய்திருந்தாலும் அதற்காகப் பத்து குற்றச்செயல்களைச் செய்யும் உரிமத்தை அவருக்கு வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தன் மீது கருணை காட்டும்படி வேண்டவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் பிரசாந்த் பூசண் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு கருத்துக்களைத் திரும்பப் பெறப் பிரசாந்த் பூசணுக்கு நீதிபதிகள் 3 நாள் கெடு விதித்தனர்.