ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு வேலைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் ஆண்டுக்கு இருமுறை 12 மொழிகளில் இந்த தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பணியாளர் முகமையை அமைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் பொது தகுதி தேர்வு குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தேசிய பணியாளர் தேர்வு முகமை அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்றும் அதன் மூலம் ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இந்தி, ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் உரிய காலகட்டத்தில் 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் நிலையானதாக, பொதுவானதாக இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போட்டித்தேர்வையும் இரண்டரை கோடி பேர் முதல் 3 கோடி பேர் வரை எழுதி வருகிறார்கள். இனி அவர்கள் ஒரு தடவை தேர்வு எழுதிவிட்டு அதே தேர்வாணையங்களுக்கு மேல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகாலம் அந்த மதிப்பெண்கள் செல்லுபடியாகும். பணியாளர் தேர்வாணயம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம், வங்கி தேர்வு அமைப்பு ஆகியவை இதுவரை நடத்தி வந்த குரூப்.பி, குரூப்.சி பணியிடங்களுக்கான ஆள் எடுக்கும் தேர்வை இனி தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள், 12ஆம் வகுப்பு தேறியவர்கள், 10ஆம் வகுப்பு தேறியவர்கள் என 3 தரப்பினருக்கும் தனித்தனியாக பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும். பொதுவான இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் விருப்பப்படும் தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தால் இருப்பு அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைவதால் பெண் விண்ணப்பதாரர்களின் அசௌகரியங்கள் குறையும் என்றும் பல மொழிகளில் தேர்வு நடப்பதால் அனைத்து மாநில மக்களுக்கும் சமமான போட்டி வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.