ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் போன்ற அரசுப் பணிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொதுவான தகுதித் தேர்வு நடத்த ஏதுவாக தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும், இப்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளிலேயே நடத்தப்படும் தேர்வுகள் இனி 12 மொழிகளில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். நடப்பு அரவைப் பருவத்தில் கரும்புக்குக் குவிண்டாலுக்கு 285 ரூபாய் என விலை நிர்ணயிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.