எல்லையில் சவால் விடுத்தவர்களுக்கு இந்திய வீரர்கள் உரிய பாடம் புகட்டியிருப்பதாக, சுதந்திர தின விழா உரையில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என குறிப்பிட்ட மோடி, அதிவேக பிராட்பேண்ட் சேவை பெறும் வகையில், ஆயிரம் நாட்களில் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் ஃபைபர் ஆப்டிக் நெட்ஒர்க்கில் இணைக்கப்படும் என்றார். அனைவருக்கும் தனி மருத்துவ அடையாள அட்டை வழங்கும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார்.
பிரதமர் மோடி தொடர்ந்து 7ஆவது முறையாக டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா உரையாற்றினார். ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் அவர்ஆற்றிய உரையில், நாடு தற்சார்பை எட்டுவதற்கு 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்றிருப்பதாகக் கூறிய அவர், தற்சார்பு இந்தியா என்பது கனவல்ல, அனைவருக்குமான தாரக மந்திரம் என்றார். மேக் இன் இந்தியா என்பதோடு, மேக் ஃபார் வேர்ல்டு என்பது பற்றியும் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் கூறினார்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என குறிப்பிட்ட அவர், விவசாயிகள், சிறுதொழிலதுறையினரும் சிறிய வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்றார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை இந்திய மரபின் வேர்களோடு இணைப்பது மட்டுமின்றி, அவர்களை உலக சிட்டிசன்களாக உயர்த்தும் என அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியாவோடு அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில், அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க், அடுத்த ஆயிரம் நாட்களில் 6 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என பிரதமர் அறிவித்தார். புதிய சைபர் பாதுகாப்பு கொள்கையும் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் விஞ்ஞானிகள் 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அந்த ஆய்வுகள் வெவ்வேறு நிலையில் இருப்பதாகவும் மோடி கூறினார். தடுப்பூசி தயாரானவுடன் அதை அனைவருக்கும் குறுகிய காலத்தில் கொண்டுசேர்க்க திட்டம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சுகாதார முறைகளை புரட்சிகரமாக மாற்றும், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். இதன்படி, ஹெல்த் ஐடி என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அதில் நோய் பாதிப்பு, எடுத்துக் கொண்ட மருந்துகள், எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டது என்பன உள்ளிட்ட மருத்துவ விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றார்.
100 நகரங்களில் மாசுபாட்டை குறைக்கும் திட்டம் தொடங்கப்படும் என அவர் கூறினார். கடலாலும் நிலத்தாலும் இணைக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதேசமயம், கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக இருந்தாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக இருந்தாலும், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எதிரிகளுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே உரிய பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக மோடி கூறினார்.