ஆன்லைன் மூலம் மருந்துகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் புதிய சேவையை பெங்களூருவில் அமேசான் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலுக்குப் பிறகு வீடுகளில் இருந்து மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, ஏற்கனவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்னையை சேர்ந்த நெட்மெட்ஸ் என்ற ஆன்லைன் மருந்து டெலிவரி நிறுவனத்தை வாங்க, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழலில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் அமேசானும் மருந்து விற்பனையில் களமிறங்கி இருக்கிறது. கடந்த மே மாதம் பெங்களுருவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை அமேசான் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.