இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக்கூறி தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக்டாக்கில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
டிக்டாக்கின் தலைமைச் செயல் அதிகாரியும் செயல்பாட்டுத் தலைவருமான கெவின் ஏ மெயர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டிக்டாக் நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பு 50 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. அதன் இந்திய மதிப்பு மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் (37408 கோடி ) அளவில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் இருபது கோடி பயணர்கள் டிக்டாக்குக்கு இருந்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் குழு டிக் டாக் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா அல்லது ஒட்டுமொத்தமாக டிக்டாக்கை (இந்திய செயல்பாடு) வாங்கலாமா என்று மதிப்பீடு செய்து வருகிறார்களாம். இந்த வர்த்தக முதலீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த மாதமே துவங்கிவிட்டாலும் இன்னும் எந்த முடிவும் எட்டபடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் டிக்டாக் தடைக்கான செயல் ஆனையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில் மைக்ரோசாப்ட், டுவிட்டர் நிறுவனங்களும் டிக்டாக்கை வாங்கத் திட்டமிடுவதாகத் தகவல் வெளியானது. அதைப்போல இந்தியாவில் டிக்டாக்கை ரிலையன்ஸ் வாங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ராணுவம் இந்தியாவுடன் அடாவடி சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, மத்திய அரசு ஜூன் மாதத்தில் டிக்டாக் உட்பட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.