உத்தரபிரதேசம் போல கர்நாடகாவிலும் பொது சொத்துகளை சேதப்படுத்திவர்களிடத்தில் இருந்து நஷ்ட ஈடு பெறப்படும் என்று கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கும் தீவைத்தனர். எம்.எல்.ஏ.வும் மற்றும் குடும்பத்தினரும் வீட்டில் இல்லாததால், உயிர் தப்பினர். அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் வீட்டுக்கும், கோவிலின் நிர்வாகியான முனே கவுடா என்பவரின் வீட்டுக்கும் வன்முறையாளர்கள் தீவைத்தனர். எம்.எல்.ஏ.வின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீக்கிரையாக்கப்பட்டது.
போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுகும் தீ வைப்பில் இருந்து தப்பவில்லை. டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைர சந்திரா பகுதிகளில் தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வள்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர். போலீஸார் கண்ணீர்புகை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். போலீஸ் நிலைய வளாகத்துக்குள் நிறுத்திதி வைக்கப்பட்டிருந்த 200 மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்து கொழுத்தப்பட்டன..
வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாசின் பாட்ஷா(வயது 28), வாஜித் அகமது(25) மற்றும் நாகவாராவை சேர்ந்த சேக்சுதீன்(24) ஆகிய இளைஞர்கள் பலியானார்கள். போலீஸார் மீது வன்முறையாளர்கள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த வன்முறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 78 பேர் காயமடைந்தனர். 300 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. தற்போது, வன்முறை வெடித்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வன்முறைக்கு வித்திட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஜாமீல் பாட்ஷா, ஆயாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக கிட்டத்தட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் , செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி, ''குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடத்திலிருந்து உத்தரபிரதேச அரசு நஷ்ட ஈடு வசூலித்தது. அதேபோல, கர்நாடகத்திலும் வசூலிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்பி விட முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.