ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்துள்ள தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொரோனாவைத் தடுக்க Sputnik V என்ற தடுப்பூசி தயாராகிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமது மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும், அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த தடுப்பூசி மீது இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் அது கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இறுதிகட்ட சோதனையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உரிய பரிசோதனை நடத்தாமலும், தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. இருப்பினும் இந்த தடுப்பூசி செப்டம்பர் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மருத்துவ பணியார்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதற்கட்டமாக போடப்படும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே, ரஷியாவின் மருந்தை வாங்கும் முயற்சியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ரஷ்ய தடுப்பூசி திட்டத்திற்கு நிதியளிக்கும் நிறுவனத்தின் தலைவர் கிரில் டிமிட்ரியேவ், ஒரு பில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை தயாரிக்க ரஷ்யாவுக்கு கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் உடனான பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள்ளதாக தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் ரஷியாவின் மருந்து இல்லாத நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபிய உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனைக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.