கர்நாடக மாநிலத்தில் இறந்து போன மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைத்து தன் வீட்டு புதுமனை புகு விழாவில் கணவர் பெருமைப்படுத்தியது மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கடந்த ஆகஸ்ட் 8- ந் தேதி ஒரு வீட்டின் புதுமனை புகு விழா நடந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் மனைவி மாதவி ஏற்கெனவே இறந்து விட்டார். ஆனால், புதுமனை புகு விழாவுக்கு வந்த உறவினர்களுக்கோ ஒரு வியப்பான செய்தி காத்திருந்தது. விழா நடந்த மண்டபத்தின் நடுவே இருந்த ஷோபாவில் ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் மறைந்த மனைவி மாதவி நடுநாயகமான அமர்ந்திருந்தார். பிங்க் நிற சேலை அணிந்து உயிருடன் உள்ள பெண் போலவே அவர் இருந்தார். இதை பார்த்த உறவினர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. இறந்து போன மாதவி எப்போது உயிருடன் வந்தார் என்று தங்களைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், பக்கத்தில் நெருங்கி பார்த்த போதுதான் அது சிலை என்பது தெரிய வந்தது.
அந்தளவுக்கு, தத்ரூபமாக மாதவியின் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தவர்கள் ஸ்ரீநிவாஸ மூர்த்தி குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் போது , மாதவியின் சிலையுடன் சேர்ந்தே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மனைவி மீது கொண்ட அளவற்ற பாசத்தினால், தான் கட்டிய புது வீட்டில் தன் மனைவி இல்லாத குறையை போக்கும் வகையில் ஸ்ரீனிவாஸ் மூர்த்தி அந்த சிலையை வடிவமைத்தது தெரிந்து உறவினர்கள் நெகிழ்ந்தே போனார்கள்.
ஸ்ரீநிவாஸின் மகள்கள், எங்கள் தாயார் எங்களுடன் இருப்பது போன்ற உணர்வை இந்த சிலை தருகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இறந்து போன மனைவியை இப்போதும் மறக்காமல் அன்பு செலுத்தி வரும் ஸ்ரீனிவாஸ் மூர்த்திiய கலியுக ராமர்தான் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.